×

ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன: அமர்வு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பரபரப்பு வாதம்

சென்னை: செந்தில் பாலாஜியின் வங்கி கணக்குகளிலும், ஆவணங்களில் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கணிக்க கூடிய குற்றங்கள் வராது.

செந்தில் பாலாஜி கடந்த 2013 முதல் 2022 வரை 64 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் அமலாக்கத்துறை அதை ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் என்று மாற்றியுள்ளது. அவரது சம்பள வருமானத்தையும், விவசாயத்தில் வந்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவருடைய வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளன. அவர் டெபாசிட் செய்த தொகையை கூடுதலாக காட்டியுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் அவர் வங்கியில் டெபாசிட் செய்த தொகையும், அமலாக்கத்துறை தெரிவித்துள்ள தொகையில் வித்தியாசம் உள்ளது. அதை அமலாக்கத்துறை மாற்றி உள்ளது.

அவரிடம் இரண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் ஒரு பென் ட்ரைவ் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை காலதாமதமாகவே வழக்கின் ஆவணமாக சேர்த்துள்ளனர். அவருக்கு எதிராக 69 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களின் தேதிகள் பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. முறைகேடு செய்ததாக கூறப்படும் காலகட்டம் எனக் கூறியுள்ள அந்த காலகட்டத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும் 7 ஆண்டுக்கும் பின்னரும் அவரது வங்கி கணக்குகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் சந்தேகம் உள்ளது.

அவர் இதுவரை 207 நாட்கள் சிறையில் உள்ளார். சாட்சி விசாரணை நடத்தப்படாமலேயே அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆவணத்தையும் மாற்றவில்லை. வங்கி அதிகாரிகளின் சாட்சியம் உள்ளது. முறைகேடு தொடர்பான ஆவணங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் வரும் 12ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார்.

The post ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன: அமர்வு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பரபரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Ariyama Sundaram ,Minister ,Enforcement Department ,Sessions Court ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...